செய்திகள்

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் - நிதி ஆயோக் ஆதரவு

Published On 2017-08-27 23:17 GMT   |   Update On 2017-08-27 23:17 GMT
பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த நிதி ஆயோக் ஆதரவு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் நிபுணர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியிருந்தது.

இந்நிலையில் குடியரசு தின உரையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், இதற்கான காலம் தற்போது கனிந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி சட்டத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக பிப்ரவரி மாதம் பேசும் போது கூறியதாவது:-

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பா.ஜனதா உள்பட பல மாநிலங்களின் ஆட்சிக்கு இழப்பு ஏற்படலாம். ஆனால் அரசியல் கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் அதை பார்க்காமல் தேசிய நலனை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒரு கட்சியோ அல்லது ஒரு ஆட்சியோ இதை தீர்மானிக்க முடியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து தேர்தல் நடத்துவதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ரூ.1,100 கோடிக்கு மேல் செலவு ஆனது. 2014-ம் ஆண்டு தேர்தலில் அது ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. மேலும் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிறது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நம் தேச பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே இதற்கு தீர்வு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மத்திய திட்டக்குழுவான நிதி ஆயோக் அமைப்பும் தற்போது இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதுடன், தேர்தல் பிரசார நடைமுறையையும் குறைக்க முடியும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 2024-ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இப்போதே நாம் அதற்கான பணியை தொடங்க வேண்டும். இதன் மூலம் சில மாநில ஆட்சிகள் முன்கூட்டியோ கலைக்கப்படலாம். சில மாநில அரசுகளுக்கு நீட்டிப்பு வழங்கவும் வாய்ப்பு உள்ளது.

தேசிய நலனுக்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் மற்றும் சட்ட நிபுணர்கள் ஒருங்கிணைந்து இதை நடைமுறைப்படுத்த 2020-ம் ஆண்டுக்குள் பொருத்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டத்திருத்தத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News