செய்திகள்

விவசாயிகளின் லாபத்தை பெருக்க விவசாய நிலங்களில் மரம் வளர்க்க சட்டம்: பிரதமர் மோடி தகவல்

Published On 2017-08-22 23:33 GMT   |   Update On 2017-08-22 23:33 GMT
விவசாயிகளின் லாபத்தை பெருக்க விவசாய நிலங்களின் ஓரங்களில் மரம் வளர்க்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் இளம் தொழில் முனைவோர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அப்போது அவர், “விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நமது நாட்டில் மரங்கள் இறக்குமதி செய்கிற நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது” என வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “விவசாய நிலங்களின் ஓரங்களில் மரங்கள் வளர்க்க வேண்டும். இந்த மரங்களை விவசாயிகள் வெட்டி, விற்பனை செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான சட்டம் இயற்றும் பரிசீலனையில் மத்திய அரசு உள்ளது. இது விவசாயிகளின் லாபத்தை இரு மடங்கு ஆக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “வளைகுடா நாடுகளில் விவசாய உற்பத்தி என்பது மிக மிக குறைவு. அவர்களின் தேவைக்கேற்றவிதத்தில் நாம் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யலாம். பதிலுக்கு அவர்களிடம் இருந்து நாம் எரிசக்தியைப் பெறலாம்” என்றும் அவர் கூறினார். “பண்டிகை காலத்தில் காதி பொருட்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தால், ஏழை எளியோருக்கு உதவுவதாக அமையும்” எனவும் பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார். 
Tags:    

Similar News