செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கோரிக்கை

Published On 2017-08-22 07:26 GMT   |   Update On 2017-08-22 07:26 GMT
சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலுக்கு சென்ற சசிகலா கடந்த 7 மாதமாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தண்டனை உறுதி செய்ததை எதிர்த்து சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீது கடந்த 2-ந்தேதி விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்கும் நீதிபதி நாரிமன் கர்நாடகத்துக்காக காவிரி வழக்கில் ஆஜரானதாலும், ஜெயலலிதா தரப்பு வக்கீலாக இருந்ததாலும் நீதிபதி நாரிமன் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். வேறு நீதிபதி விசாரிக்க சிபாரிசு செய்தார்.

இதையடுத்து சீராய்வு மனுவை நீதிபதிகள் அமித்வ ராய், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் இந்த சீராய்வு மனு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அவரது வக்கீல் சசிகலா தரப்பில் நீதிபதி பாப்டேயிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், நீதிபதி அறையில் விசாரிக்காமல், வழக்கமான கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இன்று பிற்பகல் விசாரணையின் போது இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பது தெரியவரும்.

Tags:    

Similar News