செய்திகள்

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் சஹூர் அகமது ஷா வடாலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

Published On 2017-08-18 14:36 GMT   |   Update On 2017-08-18 14:36 GMT
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சஹூர் அகமது ஷா வடாலியை, 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் மாநில அரசுக்கு எதிராக சில அமைப்புகள் தனித்து செயல்பட்டு வருகின்றன. அவை காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு தேவையான நிதி அளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரின் பிரபல தொழிலதிபரான சஹூர் அகமது ஷா வடாலியை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.



மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஹண்ட்வாரா, குப்வாரா மற்றும் பாரமுல்லா போன்ற பகுதிகளில் உள்ள வடாலியின் உறவினர்கள் மற்றும் அவரது தொழிலாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சஹூர் அகமது ஷா வடாலியிடம் விசாரணை முடிந்த நிலையில், அவரை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மேலும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வடாலியை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News