செய்திகள்

கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது: முதல்வர் சித்தராமையா

Published On 2017-08-15 15:57 GMT   |   Update On 2017-08-15 15:57 GMT
கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என முதல்-மந்திரி சித்தராமையா சுதந்திர தின விழா உரையில் பேசினார்.
பெங்களூரு:

பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். சித்தராமையா பேசுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என்றார்.

பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை. இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நம்முடைய மொழி, கலாசாரங்களை பாதுகாப்பதன் மூலம் தான் நாம் வளர்கிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாகும்.

ஒவ்வொரு மாநிலமும் அலுவலக மொழியை கொண்டுள்ளது. அந்த மொழியை முதன்மையாக பயன்படுத்தி கொள்ள அரசியல் சாசனம் இடம் அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் இன்னொரு மொழியை கட்டாயமாக புகுத்துவது சரியானது அல்ல. அவ்வாறு செய்வது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு எதிரானதாகும்.

கர்நாடகத்தில் கன்னட மொழி தான் முதன்மையானது. இதற்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது. ஆனால், அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News