செய்திகள்

கேரளாவில் பலியான தமிழரின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற கம்யூனிஸ்டு கட்சி

Published On 2017-08-14 17:18 GMT   |   Update On 2017-08-14 17:18 GMT
கேரளாவில் விபத்தில் பலியான முருகனின் குழந்தைகளின் படிப்பு செலவை கம்யூனிஸ்டு கட்சி ஏற்றுக்கொள்வதாக கம்யூனிஸ்டு செயலாளர் பாலகோபால் என்று உறுதி அளித்தனர்.
திருவனந்தபுரம்:

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

கடந்த 6-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது முருகன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் என்று 6 ஆஸ்த்திரிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செயற்கை சுவாச கருவிகள் இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி முருகனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காததால் அவர் ஆம்புலன்சிலேயே பலியானார். ஆஸ்பத்திரிகளின் மனிதாபிமானம் அற்ற செயலால் நெல்லை வாலிபர் உயிர் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள முதல்மந்திரி பினராய் விஜயன் இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் மன்னிப்பு கேட்டார். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உதவிகள் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து கொல்லம் மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு முருகனின் மனைவி முருகம்மாள் தனது 2 குழந்தைகளான கோகுல், ராகுல் ஆகியோருடன் நேற்று வரவழைக்கப்பட்டார்.

முருகம்மாள் மிகுந்த சோகத்துடன் கண்ணீர்  சிந்தியபடி காணப்பட்டார். அவரது 2 குழந்தைகளும் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தன. அதேசமயம் அந்த  குழந்தைகளுக்கு தந்தையை இழந்த சோகம் தெரியவில்லை. இது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது.

கொல்லம் மாவட்ட கம்யூனிஸ்டு செயலாளர் பாலகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகனின் குடும்பத்தினரிடம் பரிவுடன்  பேசினார்கள். அவரது குழந்தைகளின் படிப்பு செலவை கம்யூனிஸ்டு கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்தனர்.

மேலும் அரசு சார்பில் செய்யப்படும் உதவிகளை முதல்மந்திரி பினராய் விஜயனிடம் பேசி 2 நாட்களில் முறைப்படி தெரிவிப்பதாக கூறி அவர்களை அனுப்பிவைத்தனர். கணவர் மரணம் பற்றி முருகம்மாளிடம் கேட்க முயன்ற போது அவர் கண்ணீருடன் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவர் முருகனின் மரணம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது `திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாச சிகிச்சை வசதி இல்லாததால் உரியநேரத்தில் முருகனுக்கு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

முருகனை சிகிச்சைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்சின் உரிமையாளர் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முருகனை ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க  மறுத்துவிட்டனர். அதன் பிறகு ஒரு டாக்டர் ஆம்புலன்சிற்கு வந்து நோயாளி யார்? என்று கேட்டார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர். உறவினர்கள் யாரும் உடன் இல்லை என்று தெரிந்ததும் உடனே அவர் அங்கு செயற்கை சுவாச சிகிச்சை வசதி இல்லை என்று சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டார். அவர் தமிழர் என்பதால் தான் அவர் உயிரை காப்பாற்றாமல் விட்டுவிட்டனர். அவர்கள் நினைத்திருந்தால் முருகனுக்கு அவசர சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆஸ்பத்திரியில் சம்பவத்தன்று ஒரு செயற்கை சுவாச சிகிச்சை வசதி கருவி பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News