செய்திகள்

இந்த ஆண்டு ஜூன் வரையில் தமிழகத்தில் 232 நெசவாலைகள் மூடப்பட்டுள்ளன: மக்களவையில் ஸ்மிருதி இரானி தகவல்

Published On 2017-08-10 11:09 GMT   |   Update On 2017-08-10 11:09 GMT
பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் சுமார் 682 நெசவாலைகள் மூடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று, மத்திய அரசிடம் புதிதாக நெசவு ஆலைகளை தொடங்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘இந்த ஆண்டின் ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், சுமார் 1,399 நெசவாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் சிறுதொழில் வகையை சாராதவை.

இவற்றில் 752 ஆலைகள் தமிழகத்திலும், 135 ஆலைகள் மராட்டியத்திலும், 112 ஆலைகள் ஆந்திராவிலும் செயல்பட்டு வருகின்றன.



இதேபோல், இந்த ஆண்டின் ஜூன் மாதம் இறுதிவரை சுமார் 682 நெசவு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 232 ஆலைகளும், மராட்டியத்தில் 85 ஆலைகளும், உத்தரப்பிரதேசத்தில் 60 ஆலைகளும், அரியானாவில் 42 ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால், இந்த துறையில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை அனைத்து தொழிலாளர்களும் வரவேற்கின்றனர்.

மேலும், நஷ்டமடைந்து வரும் நெசவு ஆலைகளை மீண்டும் இயக்க, மாநில அரசு அனுமதி அளித்தால் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News