செய்திகள்

வருமான வரி சோதனையை டி.கே.சிவக்குமார் சட்டப்படி எதிர்கொள்வார்: முதல்-மந்திரி சித்தராமையா

Published On 2017-08-06 03:05 GMT   |   Update On 2017-08-06 03:05 GMT
வருமான வரி சோதனையை டி.கே.சிவக் குமார் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும், இந்த சோதனைக்கு மத்திய போலீஸ் படையை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத்தில் பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள சேதப்பகுதிகளை பார்க்க சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரது கார் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு கூட சுதந்திரம் இல்லை. இதனை தீவிரமாக கண்டிக்கிறேன்.

குஜராத்தில் ஹிட்லர் ஆட்சி நடப்பதாக நினைக்கிறேன். பா.ஜனதாவினர் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். பா.ஜனதாவினருக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.

வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினரே தாமாக முன்வந்து சோதனை நடத்தினால், அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் தூண்டுதலால் டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மத்திய போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது.



டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவர் கேபினட் மந்திரியாகவும் உள்ளார். அப்படி இருந்தும் அவரது வீட்டில் சோதனை நடத்த மத்திய போலீஸ் படையை பயன்படுத்தியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டாலோ அல்லது மாநில போலீசார் சரியாக செயல்படாத நிலையில் இருந்தாலோ தான் மத்திய போலீஸ் படையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஒரு நிலைமை கர்நாடகத்தில் இல்லை.

காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார் மீது வழக்குகள் உள்ளன. பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மீதும் வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்?. இவற்றை எல்லாம் விட ஈசுவரப்பா வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் கைப்பற்றப்பட்டது. அவர் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் தயங்குவது ஏன்?. கர்நாடக அரசின் விவகாரத்தில் மத்திய அரசு தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது.

மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம். டி.கே.சிவக்குமாருக்கு அதற்கான தைரியம் உள்ளது. அரசியல் காரணங்களால் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அதனால் வருமான வரி சோதனை விவகாரத்தை அவர் சட்டப்படி எதிர்கொள்வார்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News