செய்திகள்

மழை வேண்டி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்: ம.பி.யில் சுவாரசியம்

Published On 2017-08-05 04:19 GMT   |   Update On 2017-08-05 04:19 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் வருண பகவானின் கருணையை வேண்டி இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய சம்பவம் நடைபெற்றது.
போபால்:

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவகால மாறுபாடுகள் மற்றும் எல் நினோ காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் போதிய விளைச்சல் இன்றி, விவசாயிகள் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது.

வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. மராட்டிய மாநிலம் லத்தூரில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சரக்கு ரயில் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் அமைந்துள்ள முசாகேதி கிராமத்தினர், மழை வேண்டி ஒரு வினோத நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், வருண பகவான் தனது ஆசியை அளிப்பார் என்ற நம்பிக்கையில் வித்தியாசமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.



முசாகேதி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாகாராம் மற்றும் ராகேஷ். இருவரையும் திருமண கோலத்தில் அலங்காரம் செய்திருந்தனர். திருமண சடங்குகள் முறையாக செய்யப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆடிப்பாடி சந்தோஷமாக கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதி, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இதை தொடர்ந்து, திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்த சில மணித்துளிகளில் அப்பகுதியில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், ’’கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வருண பகவானை வேண்டி, நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தால் மழையும் பெய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News