செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் விபத்தில் இறக்கின்றனர்: மக்களவையில் அரசு தகவல்

Published On 2017-07-27 10:05 GMT   |   Update On 2017-07-27 10:06 GMT
நாடு முழுவதும் நடக்கும் சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் என மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆட்டோமொபைல் துறையில் ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விபத்துகளில் சிக்கி குறைந்தது 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ்களில் 30 சதவீதம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதேபோல் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பாலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி நிலவரப்படி சுமார் 1.62 லட்சம் பாலங்களை ஆய்வு செய்ததில், 147 பாலங்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாலங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News