செய்திகள்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட 4 பேர் உயிரிழப்பு

Published On 2017-07-26 11:14 GMT   |   Update On 2017-07-26 11:14 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் அடித்துச் செல்லப்பட்டதில் நோயாளி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேம்பாலங்களிலும் அபாள அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், பலமு மாவட்டம் செயின்பூரில் இருந்து ராஞ்சி நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்துகொண்டிருந்தது. அதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் அவரது உறவினர்கள் வந்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை லோகர்தகா மாவட்டம் கோயல் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது, பாலத்தை தாண்டி வெள்ளம் வந்ததால் திடீரென ஆம்புலன்ஸ் என்ஜின் ஆப் ஆகிவிட்டது. டிரைவரும், ஆசிரியரின் மருமகனும் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ள, மீண்டும் ஸ்டார்ட் ஆனது. அதேசமயம், வெள்ளம் மேலும் அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் உள்ளேயே சிக்கியிருந்ததால் அவர்கள் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் கிரேன் மற்றும் கயிறுகளுடன் உடனடியாக வந்து மீட்பு பணியை தொடங்கினர். ஆனால், உடல்களை மீட்க முடியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
Tags:    

Similar News