செய்திகள்

நொய்டா தொடர் கொலைகள்: தொழிலதிபர் மொனீந்தர் சிங் - உதவியாளர் சுரேந்தருக்கு மரண தண்டனை

Published On 2017-07-24 12:33 GMT   |   Update On 2017-07-24 12:33 GMT
நொய்டா அருகே நடந்த தொடர் கொலைகளில், ஒரு வழக்கில் தொழிலதிபர் மொனீந்தர் சிங், அவரது உதவியாளர் சுரேந்தர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி அருகே உள்ள நொய்டாவின் நிதாரி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மொனீந்தர் சிங்கும், அவரது உதவியாளர் சுரேந்தர் கோலியும் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளிச் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களது உடல்களை வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் வீசி எறிந்துள்ளனர். கடந்த 2005-2006ம் ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது.

சிறுமிகள் மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மொனீந்தர் சிங்கின் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில் இருந்து இளம்பெண்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக மொனீந்தர் சிங், சுரேந்தர் கோலி இருவரும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

மொனீந்தர்சிங் மற்றும் சுரேந்தர் கோலி மீது 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 16 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் சில வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டுள்ளன.

இதில், பிங்கி சர்க்கார் என்ற பெண் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மொனீந்தர் சிங், சுரேந்தர் கோலி இருவரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இன்னும் 9 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
Tags:    

Similar News