செய்திகள்

சபரிமலையில் கனமழை: மின்தடையால் பக்தர்கள் அவதி

Published On 2017-07-21 06:03 GMT   |   Update On 2017-07-21 06:03 GMT
சபரிமலையில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததில் மரங்கள் வேரோடு மின்கம்பங்கள் மீது சாய்ந்ததில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
திருவனந்தபுரம்:

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இருந்தே சீசன் காலங்களைப்போல சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலையில் அடிக்கடி மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சபரி மலையில் கனமழை பெய்தது. ஆனாலும் பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

மழை காரணமாக சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பக்தர்கள் பம்பையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பக்தர்களை பம்பையில் நீராட வேண்டாம் என்று எச்சரித்தனர்.

இந்த மழை இரவு வரை நீடித்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த மரங்கள் மின்கம்பங்களில் விழுந்ததால் மின்கம்பங்களும் ஒடிந்து மின் தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் இரவு 12 மணிக்கு பிறகுதான் மின்தடை சீரானது. இதனால் அய்யப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இன்று காலையும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஆடி மாத பூஜைகள் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதை தொடர்ந்து இன்று இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.


Tags:    

Similar News