செய்திகள்

தேஜஸ்வி யாதவிடம் நிதிஷ்குமார் கண்டிப்பு: பதவி விலகலை தவிர வேறு வழியில்லை

Published On 2017-07-19 06:29 GMT   |   Update On 2017-07-19 06:29 GMT
ஊழல் குற்றச்சாட்டால் தேஜஸ்வி யாதவை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் நேரில் வற்புறுத்தியதாகவும், இந்த வி‌ஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை என்று அவர் கூறியாதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாட்னா:

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி பதவியும், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுகாதாரத்துறை மந்திரி பதவியும் வகிக்கிறார்கள்.

லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வீடுகளில் சி.பி.ஐ., வருமானவரி அமலாக்கப்பிரிவு என அடுக்கடுக்கான சோதனைகள் நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனால் பீகார் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க தேஜஸ்வி யாதவை துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் வற்புறுத்தி வருகிறார்.

ஆனால் தேஜஸ்வி யாதவ் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறிவிட்டார். இதனால் கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் சமரச முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து நேற்று முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு குறித்து ஐக்கிய ஜனதா தளம் வட்டாரத்தில் கூறும்போது, “பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்றும் தேஜஸ்வி யாதவ் தனது நிலையை விளக்கினார். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன். எனவே ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை” என்று கூறியதாக தெரிவித்தனர்.

என்றாலும் தேஜஸ்வி யாதவை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் நேரில் வற்புறுத்தியதாகவும், இந்த வி‌ஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை என்று அவர் கூறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது இந்த வி‌ஷயம் குறித்து முடிவு எடுக்க தனக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தேஜஸ்வி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பீகார் கூட்டணி அரசுக்கான நெருக்கடி நீடிக்கிறது.

தன்னை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சனிக்கிழமை நடந்த மந்திரி சபை கூட்டத்தை தேஜஸ்வி யாதவ் புறக்கணித்தார்.

அன்றைய தினம் தேஜஸ்வி யாதவும் தனது கட்சியைச் சேர்ந்த மற்ற மந்திரிகளும் தனியாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News