செய்திகள்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்க முடியாது - பிரதமர் மோடி

Published On 2017-06-29 08:28 GMT   |   Update On 2017-06-29 08:28 GMT
பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அகமதாபாத்:

நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டுசெல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. 

டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுக் காவலர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 



இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும், கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 

அப்போது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். 

மேலும் மோடி பேசுகையில், “வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. மகாத்மா காந்தியும் அதனை ஏற்க மாட்டார். சட்டத்தை கையில் எடுக்க தனி நபருக்கு அதிகாரம் இல்லை.

காந்தியையும், வினோபாவையும் விஞ்சிய பசு பாதுகாவலர்கள் யாரும் இல்லை. காந்தியின் பூமியின் பசுவின் பெயரில் வன்முறைகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.
Tags:    

Similar News