செய்திகள்

ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலை உயர்வு இல்லை: மத்திய அரசு முடிவு

Published On 2017-06-28 23:04 GMT   |   Update On 2017-06-28 23:04 GMT
ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ரேஷன் கடைகள் மூலம் 81 கோடி மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி கிலோவுக்கு ரூ.3, கோதுமை ரூ.2, பிற தானியங்கள் ரூ.1 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு மாதத்துக்கு 5 கிலோ வீதம் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடி அளவுக்கு செலவாகிறது.



இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2013-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டப்படி பொது வினியோக திட்டத்தில் (ரேஷன்) வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வழிமுறை உள்ளது.

இந்த சட்டம் கடந்த நவம்பர் மாதத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டத்தின் கீழ் ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களின் விலையை தற்போது உயர்த்த முடியும்.

ஆனால் இந்த பொருட்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களின் விலையை மேலும் ஓராண்டுக்கு உயர்த்துவது இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இது ஏழை மக்கள் மீதான அரசின் ஈடுபாட்டை காட்டுகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News