செய்திகள்

டெல்லி கோல்ப் கிளப் மைதானத்தில் பாரம்பரிய உடை அணிந்து வந்த மேகாலயா பெண் அவமதிப்பு

Published On 2017-06-28 11:51 GMT   |   Update On 2017-06-28 11:51 GMT
டெல்லியில் கோல்ப் கிளப் மைதான விருந்தில் பாரம்பரிய உடை அணிந்து வந்த மேகாலயா பெண்ணை, வேலைக்காரி போல் இருப்பதாக கூறிய வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கோல்ப் விளையாட்டு கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 25-ந்தேதி உறுப்பினர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கிளப் உறுப்பினரான டாக்டர் நிவேதிதா பர்தாகூர் தனது ஊழியர் தைலின் லைங்டோ என்பவருடன் கலந்து கொண்டார்.

தைலின் லைங்டோ மேகாலயா மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அந்த மாநிலத்தின் பாரம்பரிய உடையான காஷி உடையை அணிந்து விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் அவரை உள்ளே விட கோல்ப் கிளப் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

அவர் அணிந்திருந்த ஆடையை காரணம் காட்டி அவரை விருந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார்கள். இந்த ஆடையை அணிந்து இருக்கும்போது வேலைக்கார பெண் போல தோற்றமளிப்பதாக கூறி அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் தைலின் லைங்டோவுடன் நிவேதிதா பர்தாகூரும் விருந்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்தார்.

இதுதொடர்பாக தைலின் லைங்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் இதே உடை அணிந்து இந்தியாவில் பல இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இதை பார்த்துவிட்டு அதில் பங்கேற்பவர்கள் என்னை பாராட்டி இருக்கிறார்கள்.

நான் எங்கள் மாநிலத்தின் பாரம்பரிய உடையை மிகவும் மதிக்கிறேன். ஆனால் இதை காரணம் காட்டி என்னை அவமதித்துவிட்டார்கள். நான் லண்டன், ஐக்கிய அரபு நாடு, போன்றவற்றிற்கும் இதே உடை அணிந்து சென்றிருக்கிறேன். அங்கும் என்னை யாரும் இதுபோன்று அவமதித்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு மத்திய மந்திரியும், மேகாலயா மாநிலத்தை சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News