செய்திகள்

60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்

Published On 2017-06-23 05:17 GMT   |   Update On 2017-06-23 05:17 GMT
தெலுங்கானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் 18 மாத குழந்தை தவறி விழுந்தது. தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தை சேர்ந்த சந்வேலி கிராமத்தில் வீணா என்ற 18 மாத குழந்தை, 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்று அருகில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீணா, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. உடனியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பட்நாம் மகேந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். விரைந்து குழந்தையை காப்பாற்றுவதற்காக நடவடிக்கையை துரிதபடுத்தினார்.



கிணற்றுக்குள் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கிணற்றை சுற்றிலும் ஆழமாக பொக்லிங் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.

நிலத்தின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளதாகவும், ஆனால் அதனை மூடாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது

Tags:    

Similar News