செய்திகள்

திருவனந்தபுரம் அருகே ஐ.டி.பெண் ஊழியருக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை: கால்டாக்சி டிரைவர் கைது

Published On 2017-06-22 05:33 GMT   |   Update On 2017-06-22 05:33 GMT
திருவனந்தபுரம் அருகே ஓடும் காரில் ஐ.டி.பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டெக்னோ பார்க் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஐ.டி.கம்பெனிகளில் ஏராளமான ஆண்-பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இங்குள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஊழியர் ஒருவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். அவர் ஒரு தனியார் கால்டாக்சியை ஆன்லைன் மூலம் தான் பயணம் செய்வதற்காக பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து அந்த கம்பெனியைச் சேர்ந்த 32 வயது டிரைவர் ஒருவர் அங்கு சென்று தனது காரில் அந்த பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார்.

அப்போது டிரைவர் ஓடும் காரில் அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை கண்டித்தார். இதனால் அந்த பெண்ணிடம் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்ட டிரைவர் அவரை அவரது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்.

ஓடும் காரில் டிரைவரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி அந்த பெண் தனியார் கால்டாக்சி அதிகாரிகளிடம் போன் மூலம் புகார் செய்தார். அதற்கு அந்த நிறுவன அதிகாரிகள் பெண்ணின் புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக சாதாரணமாக கூறிவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் இதுபற்றி பெண்களுக்காக போராடும் ஒரு அமைப்பிடம் நடந்த சம்பவத்தை கூறினார். தன்னை போல வேறு பெண்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் அமைப்பு இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தது. அவர்களது உத்தரவுபடி திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் டாக்சி டிரைவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News