செய்திகள்

சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும்: சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் ரெயில்வே தொழிலாளியின் கடிதம்

Published On 2017-06-21 13:02 GMT   |   Update On 2017-06-21 13:02 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரெயில்வே தொழிலாளி ஒருவர், சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை தேவை என தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாம் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக முன்னேற்பாடுகள் செய்தபின் அலுவலகத்தில் விடுமுறை கேட்பது வழக்கம்.

ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளி பங்கஜ் ராஜ் என்பவர், சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என கேட்டு தனது உயர்  அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

விரைவில் ஷ்ரவன் மாத (வட மாநிலங்களில் மழைக்காலத்தின் தொடக்கம்) பண்டிகை வரவிருக்கிறது. இதனால் அந்த மாதம் முழுவதும் எங்கள் வீட்டில் அசைவ உணவை சமைக்க மாட்டோம். 

எனவே சிக்கன் சாப்பிடுவதற்காக எனக்கு ஒரு வாரம் (ஜூன் 20 முதல் 27 ஆம் தேதி வரை) விடுமுறை வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து என்னால் உற்சாகமாக வேலை செய்ய முடியும் என தனது மேலதிகாரியான ஸ்டேஷன் மாஸ்டரிடம் அளித்துள்ள அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இப்போது, அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அதிகாரம் கொண்ட ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் முத்திரையும் அந்த கடிதத்தில் தெளிவாக காணப்படுகிறது.

ஆனால், ஸ்டேஷன் மாஸ்டர் பங்கஜ் ராஜுக்கு விடுமுறை கொடுத்தாரா, இல்லையா? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
Tags:    

Similar News