செய்திகள்

லக்னோ வரும் பிரதமருக்கு எதிர்ப்பு: 22 பேர் அதிரடி கைது

Published On 2017-06-20 11:10 GMT   |   Update On 2017-06-20 11:10 GMT
சர்வதேச யோகாசன தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை லக்னோ நகருக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயல்வதாக 22 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லக்னோ:

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் நாளை (21-ம் தேதி) அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள ரமாபாய் டாக்டர் அம்பேத்கர் திடலில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று யோகாசனம் செய்யும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பிக்கிறார்.

இதற்காக, இன்று மாலை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் லக்னோ நகருக்கு வருகிறார். நாளை காலை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சி தவிர பல்வேறு அரசு விழாக்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி லக்னோ நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை லக்னோ விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி தங்கும் இடத்துக்கு செல்லும் வழியில் அவரது காரை வழிமறித்து ரகளையில் ஈடுபடும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் அணியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லக்னோ நகரில் உள்ள பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசாரின் தேடுதல் வேட்டையில் பிரதமரின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மாணவர் அமைப்பின் தலைவர் உளபட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News