செய்திகள்

கூர்காலாந்து போராட்டத்தில் பயங்கர சதி - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Published On 2017-06-17 23:58 GMT   |   Update On 2017-06-17 23:58 GMT
கூர்காலாந்து போராட்டத்தின் பின்னணியில் பயங்கர சதி இருப்பதாகவும், வடகிழக்கு பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
டார்ஜிலிங்:

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் கடந்த 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு அடிக்கடி வன்முறையும் வெடித்து வருகிறது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்து உள்ளனர். இந்த போராட்டத்தில் இதுவரை 2 கூர்கா ஆதரவாளர்கள் உயிரிழந்ததாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது.



அங்கு நேற்று நிகழ்ந்த வன்முறையில் ரிசர்வ் போலீஸ்காரர் ஒருவருக்கு கூர்கா இனத்தவரின் ‘குக்ரி’ ஆயுதத்தால் குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து டார்ஜிலிங் மலைப்பிராந்திய வளர்ச்சி வாரியங்களின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுடன் நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போராட்டத்தின் பின்னணியில் பயங்கர சதி இருப்பதாகவும், வடகிழக்கு பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

போராட்டத்தை கைவிட்டு மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்த மம்தா பானர்ஜி, போராட்டம் ஓய்ந்த பிறகு அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Tags:    

Similar News