செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு

Published On 2017-06-14 05:51 GMT   |   Update On 2017-06-14 05:51 GMT
இரட்டை இலை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் புதிய பிரிவு ஒன்று கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தேர்தல் கமி‌ஷனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அவரை டெல்லி போலீசார் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். 35 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணையை டெல்லி போலீசார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக பறிமுதலான ஆதாரங்களை ஆய்வு செய்து பட்டியலிட்டு வருகிறார்கள். டெல்லி ஓட்டலில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேசிடம் பறிமுதல் செய்யப்பட்டவைகளை ஆய்வு செய்தபோது மேல்-சபை எம்.பி. என்ற பெயரில் போலி அடையாள அட்டை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த போலி எம்.பி. அடையாள அட்டையை பயன்படுத்தி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பாராளுமன்றத்துக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த போலி அடையாள அட்டையை பயன்படுத்திதான் அவன் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.


இதையடுத்து டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் புதிய பிரிவு ஒன்று கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 (மதிப்புமிக்க பாதுகாப்பு ஏற்பாட்டில் போலியை உருவாக்குதல்) சேர்க்கப்பட்டுள்ளது.

தினகரன் வழக்கில் இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க முடியும்.

அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்வது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News