செய்திகள்

மந்திரி பதவி வகித்தபோது எனது குடும்பத்தினர் செல்வாக்கை பயன்படுத்த அனுமதித்தது இல்லை: ப.சிதம்பரம் அறிக்கை

Published On 2017-05-29 20:10 GMT   |   Update On 2017-05-29 20:10 GMT
மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது எனது குடும்பத்தினர் செல்வாக்கை பயன்படுத்த அனுமதித்தது இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.
புதுடெல்லி:

மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது எனது குடும்பத்தினர் செல்வாக்கை பயன்படுத்த அனுமதித்தது இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.

2 வாரங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியாவின் நிறுவனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது கூட்டுச் சதி, மோசடி, சட்டவிரோதமாக பணம் பெறுதல், பொதுநல ஊழியர்களிடம் செல்வாக்கை பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீதும், மற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியாவிடம் இருந்து மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் பணத்தை பெற்றதாகவும் சி.பி.ஐ. கூறியது.

இதுபற்றி ப.சிதம்பரம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் விதிமுறைகளின்படியே தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவனத்துக்கும், எனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

எனது முடிவுகளில் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை என்னுடன் பணிபுரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். தவிர, எனது குடும்பத்தினரை அலுவல் ரீதியாக என்னையோ, நான் சார்ந்திருந்த அமைச்சகத்தின் அதிகாரிகளையோ சந்தித்து பேச ஒரு போதும் நான் அனுமதித்து இல்லை.

சி.பி.ஐ. வழக்கு பதிவில் எனது பெயர் இல்லை. என்றபோதிலும் என்னை களங்கப்படுத்தும் நோக்குடன் என்னை குறி வைத்தே மத்திய அரசு இந்த சோதனையை மறைமுகமாக நடத்தி உள்ளது.

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடந்து இருந்தாலும் மத்திய அரசின் இலக்கு நான்தான். சி.பி.ஐ. சோதனை நடத்தி 2 வாரங்கள் ஆகியும் இதுவரை ஏன் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News