search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி பதவி"

    கர்நாடகவில் பதவி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் போகாமல் இருப்பதற்காக மந்திரி பதவி கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். #Karnataka #CongressMLAs #RahulGandhi
    பெங்களூர்:

    கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்திய காங்கிரசும்- மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன.

    78 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, அதிகாரத்தில் நீடிப்பதற்காக வெறும் 36 எம்.எல்.ஏ.க்களையே வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுத்துள்ளது.

    காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், புதிய அமைச்சரவையில் 2 துணை முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய இலாகாக்களை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரம் காட்டினார்கள். ஆனால் காங்கிரசுக்கு ஒரே ஒரு துணை முதல்-மந்திரி பதவியை மட்டும் விட்டுக் கொடுத்த குமாரசாமி, முக்கிய இலாகாக்களை கொடுக்க மறுத்துவிட்டார்.


    இதனால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் கடைசியில் ராகுல் உத்தரவை ஏற்று அமைதியானார்கள்.

    இதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதில் பதவி கிடைக்காததால் முன்னாள் அமைச்சர்கள் எம்.பி. பாட்டீல், சதீஷ் ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி அவர்களை டெல்லிக்கு வரவழைத்து சமரச பேச்சு நடத்தினார். உரிய நேரத்தில் உரிய பதவி தரப்படும் என்று அனுப்பி வைத்தார். என்றாலும் காங்கிரசில் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அதிருப்தியிலேயே உள்ளனர்.

    கர்நாடகா காங்கிரசில் நிலவும் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்ற கர்நாடகா பா.ஜ.க. முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி தரத் தயார் என்று காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை காட்டப்பட்டுள்ளது.

    இதனால் கர்நாடகா காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.


    தற்போதைய நிலை நீடிக்கும் பட்சத்தில் நிலைமை கை மீறி போய்விடும் என்று ராகுலிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் சில மாதங்கள் தாமதித்தால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவி விட கூடும் என்றும் உறுதியாக தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தக்க வைத்துக்கொள்ள ராகுல் முடிவு செய்துள்ளார். கர்நாடகா அமைச்சரவையில் மேலும் 6 பேரை அமைச்சர்களாக்க முடியும்.

    எனவே அந்த 6 இடங்களிலும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பாட்டீல், சதிஷ் உள்பட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை சிக்கலின்றி கொண்டு செல்வதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான இந்த குழுவில் இரு கட்சி தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

    வருகிற வியாழக்கிழமை இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை வரையறுக்க ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட சில முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. #Karnataka #CongressMLAs #RahulGandhi
    கர்நாடகாவில் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    புதிய மந்திரிசபை பதவி ஏற்றது முதல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முதலில் இலாக்காக்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இறுதியில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியது. குமாரசாமியே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீடிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதற்கு பலனாக பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜே.டி.எஸ். கட்சி கூட்டணி சேர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் காங்கிரசிலும் ஜே.டி.எஸ். கட்சியிலும் மந்திரி பதவி கிடைக்காத தலைவர்கள் பலர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல், சதீஸ்ஜார்கிகோளி, எச்.கே. பட்டீல், எம்.டி.பி. நாகராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    எம்.பி. பட்டீல் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். தனக்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் எம்.பி. பட்டீல் தெரிவித்தார்.

    இதையடுத்து எம்.பி. பட்டீலை துணை முதல்- மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி கிருஷ்ணபைரே கவுடா ஆகியோர் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார்கள்.

    அதேபோல் முதல்-மந்திரி குமாரசாமியும், எம்.பி. பட்டீலை சந்தித்து பேசினார். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுத்தே தீரவேண்டும் என்று அடம்பிடித்தார்.

    இதையடுத்து மேலிட அழைப்பின் பேரில் எம்.பி. பட்டீல் மற்றும் அதிருப்தியாளர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

    எம்.பி. பட்டீலை சமாதானப்படுத்திய ராகுல் காந்தி, அடுத்தக்கட்டமாக மந்திரிசபை விரிவாக்கத்தின் போது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றார்.

    இதை ஏற்க மறுத்த எம்.பி.பட்டீல் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கட்டாயம் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன் லிங்காயத் சமூகத்தை புறக்கணித்தால் நாடாளுமன்ற தேர்தலில் வட கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்க ராகுல்காந்தி மறுத்துவிட்டார். இதனால் ராகுல்காந்தியுடன் எம்.பி.பட்டீல் நடத்திய ஆலோசனை தோல்வியில் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராகுல்காந்தியை சந்தித்து விட்டு வெளியே வந்த எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-


    எனக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றோ, துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்றோ மாநில தலைவர் பதவி வேண்டும் என்றோ ராகுல்காந்தியிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை.

    நான் ஒரு தனி ஆள் அல்ல, என்னுடன் எம்.பி. நாகராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ராகுல்காந்தியிடம் நான் பேசியது, அதற்கு அவர் கொடுத்த விளக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெங்களூருவுக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை. இதனை 4 சுவர்களுக்குள் பேசி முடிக்க வேண்டும். எந்தவொரு வி‌ஷயத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. மல்லிகார்ஜுனகார்கே மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.

    இந்த நிலையில் எம்.பி. பட்டீல் நாளை (11-ந் தேதி) பெங்களூருவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள 40 எம்.எல்.ஏ.க்கள்வரை கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #MBPatil
    மந்திரி பதவி கிடைக்காவிட்டால் காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக குமாரசாமியிடம், உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்தன. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அந்த கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்தது.

    பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரின. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமி கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 25-ந் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.

    ஆனால் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 மந்திரி பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்துகொண்டன. ஆனால் இலாகாக்களை பகிர்ந்துகொள்வதில் இருகட்சிகள் இடையே இழுபறி ஏற்பட்டு வருகிறது. இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

    காங்கிரசில் மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவதாக சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி வருவதாகவும், பா.ஜனதாவில் சேர காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி குமாரசாமியிடம் மாநில உளவுத்துறை அறிக்கை வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


    அந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம், குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவியை வழங்கவும், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியில் முக்கியமான பதவியை வழங்கி சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிதி, பொதுப்பணி, வருவாய், பள்ளி கல்வி, கால்நடை வளர்ச்சி, இந்து அறநிலையத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரசுக்கு, நகர வளர்ச்சி, போலீஸ், உயர்கல்வி, மருத்துவ கல்வி, மின்சாரம், கலால், கூட்டுறவு, கனிம வளம் மற்றும் நில அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த இலாகா பங்கீட்டுக்கு வெளிநாட்டில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக காங்கிரஸ் சார்பில் 10 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 8 மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என தெரிகிறது.
    ×