search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புது முகங்களுக்கு வாய்ப்பு - காங்கிரசில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி இல்லை
    X

    புது முகங்களுக்கு வாய்ப்பு - காங்கிரசில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி இல்லை

    காங்கிரசில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மந்திரிசபையில் புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ளனர்.

    மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகளை காங்கிரசும், 12 பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டுள்ளன. இலாகாக்கள் பங்கீடும் முடிந்துவிட்டன. முக்கியமாக நிதித்துறையை ஜனதா தளம்(எஸ்) கட்சியும், போலீஸ் துறையை காங்கிரசும் பகிர்ந்து கொண்டன. புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா வருகிற 6-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

    காங்கிரசில் 18 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் 10 மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒரு இடத்தையும் காலியாக வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளன. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு ஏதாவது கருத்து வேறுபாடுகள் எழுந்தால், மந்திரி பதவியை வழங்கி அவற்றை சரிசெய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிக முறை மந்திரிகளாக பணியாற்றியவர்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டாம் என்று மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    மந்திரிசபையில் புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டு, மூத்த தலைவர்களுக்கு கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை வழங்கும் படியும் ராகுல் காந்தி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த முறை காங்கிரஸ் சார்பில் மந்திரிசபையில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.
    Next Story
    ×