செய்திகள்

அனைத்து திட்டங்களின் பெயரை மாற்றி தொடங்கி வைத்தது தான் மோடி அரசின் சாதனை - சிவசேனா தாக்கு

Published On 2017-05-29 09:26 GMT   |   Update On 2017-05-29 09:26 GMT
முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களின் பெயர்களை மாற்றி மீண்டும் தொடங்கி வைத்ததுதான் மோடி அரசின் மூன்றாண்டு சாதனை என பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா காட்டமாக தெரிவித்துள்ளது.
மும்பை:

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வானது ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க.வினரின் கொண்டாட்டங்களை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தனது பத்திரிக்கையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளது.

அதில்,”பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டிலுள்ள விவசாயிகள், சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். ரூபாய் நோட்டை தடை செய்ததை தவிர இந்த அரசு எதுவும் செய்யவில்லை. முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களின் பெயர்களை மாற்றி மீண்டும் தொடங்கி வைத்ததுதான் மோடி அரசின் மூன்றாண்டு சாதனை” என காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உதவியுடன் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிவசேனா கட்சி தொடர்ந்து மத்திய அரசையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News