செய்திகள்

டெல்லியில் நாளை சோனியா அளிக்கும் விருந்தில் கனிமொழி கலந்து கொள்கிறார்

Published On 2017-05-25 06:13 GMT   |   Update On 2017-05-25 06:29 GMT
கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நாளை சோனியா விருந்து கொடுக்க உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதி முடிவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யாரை களம் இறக்கலாம் என்று ஆலோசனை நடத்த சோனியா நாளை டெல்லியில் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 11 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநில கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள பேச்சு நடந்து வருகிறது.

மம்தா பானர்ஜி, லல்லு பிரசாத், சரத்பவார், முலாயம் சிங், மாயாவதி, உமர் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, சரத்யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து கொடுக்க உள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சோனியாகாந்தி சென்னை வந்து கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதால் அவர் நாளையே இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News