செய்திகள்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம்: சோனியா காந்தி தொடங்கி வைத்தார்

Published On 2017-05-22 02:31 GMT   |   Update On 2017-05-22 02:31 GMT
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை சோனியா காந்தி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயம் சில அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் டெல்லியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. முதல் கையெழுத்தை சோனியா காந்தி பதிவு செய்து இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் தொடங்கினர். ஆகஸ்டு 10-ந் தேதி வரை இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறும். அதன் பிறகு அனைத்து பகுதிகளில் இருந்தும் பெறப்பட்ட கையெழுத்துகளை ஒருங்கிணைத்து ஆகஸ்டு 20-ந் தேதி ராஜீவ் காந்தி பிறந்த நாளின் போது, ஜனாதிபதியிடம் அளிக்க முடிவு செய்து உள்ளனர்.

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ரத்த தானம் வழங்கினர். 
Tags:    

Similar News