செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜூலை 10-ம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2017-05-09 06:43 GMT   |   Update On 2017-05-09 06:43 GMT
வங்கி கடன்களை திருப்பி செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்துவரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை மாதம் நேரில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.


விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் சம்மேளனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றம் செய்துள்ளது நிரூபணம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் வரும் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி தண்டனை விதிப்பது தொடர்பான எதிர்தரப்பு வாதத்தில் பங்கேற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News