உள்ளூர் செய்திகள்

கரிவலம்வந்தநல்லூரில் மணல் கடத்த முயன்ற வாலிபர் கைது

Published On 2022-07-03 09:34 GMT   |   Update On 2022-07-03 09:34 GMT
  • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • மணல் கடத்தல் தொடர்வதால் தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சங்கரன் கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கண்மாயில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் பெரும்புத்தூரைச் சேர்ந்த காளிதாசன் (வயது 31). டிராக்டர் டிரைவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான பெரும்புத்தூரை சேர்ந்த காளிராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

கரிவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிட்சேபநதி என்ற ஆறு உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ள இந்த ஆற்றில் அடிக்கடி மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உளவுத்துறை போலீசார் உயரதிகாரிகளுக்கு உரிய முறையில் தகவல் அளிக்காததால் சமூக ஆர்வலர்கள் நேரடியாக தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கரிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் மீது புகார்கள் வந்ததின் அடிப்படையில் தென்மண்டல் ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

தற்போதும் மணல் கடத்தல் தொடர்வதால் தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News