உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

கங்கைகொண்டானில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2022-06-20 09:29 GMT   |   Update On 2022-06-20 09:29 GMT
  • கங்கை கொண்டான் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக புகார்.
  • பொதுமக்கள் சாலை மறியலால் பஸ் போக்குவரத்து மாற்று பாதையில் சென்றன.

கயத்தாறு:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்குட்பட்ட வடகரை, நேதாஜிநகர், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் காலி–குடங்களுடன் கங்கை–கொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

கங்கை கொண்டான் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக தாமிரபரணி குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக மானூர் யூனியன் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேப்பங்குளம், கலப்பைபட்டி, கொடியங்குளம், கைலாசபுரம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட–வர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஜெபராஜ், கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள், தாசில்தார் சுப்பிரமணியன், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராமநிர்வாக அலுவலர் முத்துசெல்வி, யூனியன் பொறியாளர் பியூலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுத்தமான குடிநீர் வழங்க உடனடியாக திட்டப்பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News