உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான வாகனங்கள்.

கார் - ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி - 2 பேர் படுகாயம்

Published On 2022-07-06 10:29 GMT   |   Update On 2022-07-06 10:29 GMT
  • காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர்.

பாபநாசம்:

திருச்சி பிச்சாண்டவர் கோயில் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஜவகர்லால்நேரு. இவரது மனைவி பாக்கிய ராணி (வயது 65). இந்நிலையில் இன்று காலை ஜவஹர்லால் நேரு தனது மனைவி பாக்கியராணி மற்றும் மகன், மருமகள், பேர குழந்தைகளுடன் ஒரு காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு புறப்பட்டார்.‌ காரில் 6 பேர் இருந்தனர்.

அந்த கார் தஞ்சை அருகே உள்ள நெடார் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக காரும், ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்தப் பயங்கர விபத்தில் கார் ,ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். காரில் இருந்த மற்ற 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேதிதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாக்கியராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்டஇரண்டு பேரையும் மீட்டு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்த மூன்று பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சை -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News