உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தில் தீர்வு கிடைக்காது- பிரபல அரசியல் விமர்சகர் கருத்து

Published On 2022-06-28 09:39 GMT   |   Update On 2022-06-28 09:39 GMT
  • ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும்.
  • ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி திட்டமிட்டபடி நடக்குமா?

அந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பெறுவாரா?

அதன்பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன?

இந்த கேள்விகள்தான் இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு அ.தி.மு.க.வின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என்பது அரசியல் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டால் தனது அரசியல் வாழ்வு இருண்டுவிடும் என்பதை ஓ.பன்னீர்செல்வம் நன்கு உணர்ந்திருக்கிறார். இதனால்தான் அவர் ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த விட்டுவிடக் கூடாது என்று எல்லா கோணங்களிலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அணியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து காய்களை நகர்த்தி வருகிறார். அதன் ஒரு அங்கமாகத்தான் தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், 'சென்னையில் 27-ந் தேதி நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்ட விதிகளின் படி செல்லாது. அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இணைந்து தான் இதுபோன்ற கூட்டத்தை நடத்த முடியும்.

இந்த கூட்டத்தில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பது விதிகளுக்கு புறம்பானது. இதை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுமா? தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்று கேள்வி குறி எழுந்துள்ளது. பிரபல அரசியல் விமர்சகர் தராசு சியாம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுவது என்றால் இரண்டு விஷயங்களில்தான் தலையிட முடியும். ஒன்று, கட்சியின் பெயர், மற்றொன்று கட்சியின் சின்னம். இந்த இரண்டு விஷயங்களில்தான் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பது அந்த கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமானது. கட்சி பயன்படுத்திக்கொள்ள உரிமையை மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டதும் முதலில் அதற்கு சுயேட்சையை போன்று ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். தேர்தலில் அந்த கட்சி குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்று காண்பித்த பிறகுதான் அந்த சின்னத்தை அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிரந்தரமாக வழங்கும். அதாவது பயன்பாட்டு உரிமையை கொடுக்கும்.

இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் கட்சியின் தேர்தல் சின்னத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதுபோன்று தான் கட்சியின் பெயரில் முடிவெடுக்கும் உரிமையும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

ஆனால் கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மிக ஆழமாக சென்று தலையிடுவது இல்லை. இதற்கு தேர்தல் ஆணையத்தில் எத்தனையோ முன் உதாரணங்கள் இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 1969-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது பொதுச்செயலாளராக இருந்த சாதிக் அலி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வெற்றிபெற்ற பிறகுதான் வந்தது.

அதே சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியின் பிளவு தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தேர்தல் ஆணையம் 3 விதமான நடைமுறைகளை கையாளும்.

1. எந்த அணியிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

2. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகம் இருக்கிறார்கள்? என்று பார்ப்பார்கள்.

3. கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்பார்கள்.

இந்த மூன்றில் ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் இருப்பதுண்டு. எனவே இந்த இரண்டின் அடிப்படையில் எளிதில் முடிவெடுக்க வாய்ப்புகள் உண்டு.

கட்சியின் சட்ட விதிகள் தொடர்பாக பெரும்பாலும் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள கட்சிக்கு, சட்ட விதிகள் என்று ஏராளமான விதிகள் உள்ளன. அந்த விதிகளில் உள் பிரிவு விதகிளும் ஏராளம் இருக்கும்.

அந்த விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேர்தல் ஆணையத்தில் அந்த அளவுக்கு சட்ட வல்லுனர்களின் பலம் கிடையாது. சட்ட நிபுணர்கள் மிகவும் குறைவாக இருப்பதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சட்ட விதிகளில் இதுவரை ஆர்வம் காட்டியதே கிடையாது. இது தொடர்பாக ஏதேனும் மனுக்கள் வந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் சிவில் கோர்ட்டு தீர்ப்புக்கு தள்ளிவிட்டு விடும். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.

எனவேதான் சட்ட விதிகளை பயன்படுத்தி ஒரு கட்சியை ஒரு அணி கைப்பற்றியதாக இந்தியாவில் வரலாறே கிடையாது. அந்த அடிப்படையில் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு கடிதம் கை கொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கட்சியின் சட்ட விதி மீறல்கள் பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். இதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லையென்றுதான் கருதுகின்றேன். எனவே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மேற்கொண்டுள்ள முயற்சி வீணான முயற்சி.

என்றாலும், அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள குற்றச்சாட்டு கடிதத்தின் பின்னணியில் ஏதாவது ஒரு சூட்சுமம் அல்லது வியூகம் இருக்கும் என்றே கருதுகின்றேன். தேர்தல் ஆணையம் தனது கடிதம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்காது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.

அதிகபட்சம் இந்த கடிதம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பலாம். மற்றபடி வேறு எந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பே இல்லை.

ஆனால் கோர்ட்டு மூலம் ஏதாவது அதிசயம் நடந்து விடாதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கருதுகிறார்கள். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்ற வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.

அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, 'கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளுங் கள்' என்று நீதிபதிகள் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்னதாகவே தேர்தல் ஆணையத்தை அணுகி இருப்பதாக நான் கருதுகின்றனே்.

கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நாங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டோம். அவர்கள் இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கோர்ட்டும் முடிவெடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு இரண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு முழுமையாக கைகொடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இந்த விஷயத்தில் பா.ஜனதா யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க. வில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

இந்த பிரச்சினைக்கு எம்.ஜி.ஆர். தனது உயிலில் விடை எழுதி வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர். எழுதிய உயில், 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி ஜானகி அம்மாள் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். முன்னாள் அவைத் தலைவர் ஈ.வே.வள்ளிமுத்துவும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது உயிலில், 'எனது காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டால் அப்போதுள்ள அங்கத்தினர்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேர் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இதன்படி பார்த்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர். மொத்தம் 23 பக்கங்கள் உயில் எழுதியிருந்தார். கடந்த 23-ந் தேதிதான் அ.தி.மு.க. பொதுக்குழுவில் சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த 23-க்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும் காலம் எதையோ உணர்த்த முற்படுகிறது. ஆனால் அதை புரிந்துகொள்ள தவறுகிறது அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை.

இவ்வாறு அரசியல் விமர்சகர் தராசு சியாம் கூறியுள்ளார்.

Tags:    

Similar News