உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் பலர் உள்ளனர்.


நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-08-19 06:05 GMT   |   Update On 2022-08-19 06:54 GMT
  • 1982-ம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.
  • தற்போது 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1982-ம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் நீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு மாணவர்கள் ஆய்வகத்தில் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன்.

இங்கு ரூ.60கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப்பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News