உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ். அணி முயற்சிகளை தடுக்க அதிரடி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

Update: 2022-10-07 05:50 GMT
  • தொடக்க விழா நிகழ்ச்சியை தென் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
  • சமீபத்தில் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கு எழுந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. கட்சியை கைப்பற்ற போவது யார்? என்பதில் தொடர்ந்து மல்லு கட்டுகிறார்கள்.

கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்ட போராட்டங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருந்தன. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்ட போராட்டத்தை கைவிடவில்லை.

எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டியதையோ, அவரை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையோ கோர்ட்டுகள் தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.

சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில் பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசரப்படுவது ஏன்? என்று தான் கேள்வி எழுப்பியது.

அதைத் தொடர்ந்து கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

கோர்ட்டு தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்டமாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகுவார். அவரது தரப்பிலும் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும்படி மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அடுத்த வாரத்துக்குள் பட்டியலை தயார் செய்து அனுப்ப கூறி இருக்கிறார்கள்.

ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் தனக்கு ஆதரவாக இருப்பதை உறுப்பினர்களின் கையெழுத்துடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

முதற்கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் படம் நீக்கப்பட்டு புதிய அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் இந்த உறுப்பினர் அட்டை இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மாவட்ட வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

உறுப்பினர் அட்டை விநியோகம், கட்சியின் 51-ம் ஆண்டு விழா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இழுத்து அவரை தனிமைப்படுத்துவது, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

முக்கியமாக கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்ய உள்ளார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சியை தென் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கனவே சமீபத்தில் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் குருபூஜையின் போது தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றியும் விவாதித்து மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபையில் இதனை அங்கீகரிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம் வகுத்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்தது தொடர்பான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சபாநாயகரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

Tags:    

Similar News