உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கிய காட்சி.

ரூ. 3.16 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

Published On 2022-06-20 09:38 GMT   |   Update On 2022-06-20 09:38 GMT
  • ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேலை செய்து வருகின்றனர்.
  • விவசாய நிலமாக உள்ளதால் வேற இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

மணிமுத்தாறு பேரூராட்சி மேலஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு நத்தம் நிலத்தில் கடந்த 1989-ம் ஆண்டு இலவச வீட்டுமனைபட்டா, தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. இங்கு 30 ஆண்டுகளாக குடிநீர், சாலை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. போர் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

எனவே குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடம் எங்கள் பகுதியில் உள்ளது. அதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வன்னி கோனேந்தலுக்குட்பட்ட மேசியாபுரம் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேலை செய்து வருகின்றனர்.

இதனால் முதிய வர்கள், பெண்கள் சிரமப்படு கின்றனர். எனவே எங்கள் பகுதியில் நடைபெறும் பணியில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காருகுறிச்சி பகுதியை சேர்ந்த உகந்தநாச்சியார்புரம் பகுதி கிராமமக்கள் கொடுத்த மனுவில், தெற்கு காருகுறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நத்தம் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சம்பந்தபட்ட இடம் விவசாய நிலமாக உள்ளதால் வேற இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

முன்னதாக கலெக்டர் விஷ்ணு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரணநிதி ரூ. 2.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா, சான்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சமூகபாதுகாப்புதிட்ட தனிதுணை கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News