உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 565 குழந்தைகளுக்கு நிவாரண உதவி

Published On 2022-05-26 09:59 GMT   |   Update On 2022-05-26 09:59 GMT
பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து  உதவித் தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோர்களில் ஒருவரை இழந்த 544 குழந்தைகள் என மொத்தம் 565 குழந்தைகளுக்கு கொரோனா நிவாரண தொகை அளிக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களில் ஒருவரை இழந்த மேலும் 239 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மதியழகன் கூறியதாவது:-


கோவை மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 21 பேர், பெற்றோர்கள் ஒருவரை இழந்த 783 பேர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதனை முழுமையான ஆய்வு செய்து தகுதி உடையவர்கள் என உறுதி செய்யப்பட்ட பின் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோர்கள் ஒருவரை இழந்த 544 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.  மற்றவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும். 

கொரோனா பாதிப்பால் பெற்றோர்களில் ஒருவர், பெற்றோர்கள் இருவரையும் இழந்த 804 குழந்தைகளுக்கு  முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு   மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

தனியார் பள்ளிகளில் படித்து வரும் 550 மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் படித்து வரும் 37 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைக்க பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 39 குழந்தைகள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

Similar News