உள்ளூர் செய்திகள்
கைது

ஓமலூர் அருகே யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது

Published On 2022-05-20 09:43 GMT   |   Update On 2022-05-20 09:43 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2 வாலிபர்கள் துப்பாக்கிகள் தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி என்ற இடத்தில் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்ட இவர்கள் 2 பேரும் சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் போலீசாரிடம் தாங்கள் ஒரு இயற்கை ஆர்வலர்கள், பறவைகள் பாதுகாப்பதற்காகவும், பொதுமக்களை பாதுகாக்கவும் இந்த ஆயுதங்களை வைத்துள்ளோம் எனவும், மேலும் யூடியூப் சேனல் மூலம் துப்பாக்கி செய்வது எப்படி? என தெரிந்துகொண்டு இந்த துப்பாக்கிகளை தயார் செய்தோம் என்றும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

இதில் சஞ்சை பிரகாஷ் என்ஜினீயர் ஆவார். நவீன் சக்கரவர்த்தி பி.சி.ஏ பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர்கள் சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி என்ற ஒரு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு துப்பாக்கி செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், மற்றும் துப்பாக்கி செய்யும் உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓமலூர் அருகே 2 வாலிபர்கள் துப்பாக்கிகள் தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News