உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மக்கள் ஆர்வம் காட்டும் இடங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறையினர் வலியுறுத்தல்

Published On 2022-05-13 06:39 GMT   |   Update On 2022-05-13 06:39 GMT
ஒரு பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த 2 மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர், 2 உதவியாளர் வீதம் 4 பேர் பணியமர்த்த வேண்டியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் குறைந்துள்ளது. முகாம் நடத்த செலவு அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

ஒரு பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த 2 மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர், 2 உதவியாளர் வீதம் 4 பேர் பணியமர்த்த வேண்டியுள்ளது. காலை 7 மணிக்கே முகாம் துவங்க அறிவுறுத்தப்படுவதால் காலை, மதியம் 2 நேரத்துக்கான உணவு வழங்க வேண்டியுள்ளது. 

குறைந்தபட்சம் ஒரு முகாமுக்கு ரூ.500 முதல் 1,500 செலவிடப்படுகிறது. வெயில் அதிகமாக இருந்தால் சாமியானா பந்தல், டேபிள் அமைக்க செலவு செய்யப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் நடக்கும் முகாம்களுக்கு மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் இருந்து நிதி ஒதுக்கப்படுகிறது. மாவட்டத்தின் பிற பகுதியில் நடக்கும் முகாம்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை வாயிலாக முகாம் முடிந்த பின் செலவுத்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த வாரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்திய வகையில், சுகாதாரத்துறைக்கு ரூ.4 முதல் 8 லட்சம் வரை செலவாகியுள்ளது. ஒரு முகாமுக்கு குறைந்தபட்சம் 200 பேர் தடுப்பூசி செலுத்த வருவதே அரிதாக உள்ளது. அதாவது தடுப்பூசி முகாம் அதிக இடங்களில் நடத்தும் போது செலவு அதிகரிக்கிறது.

30 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்த வருகின்றனர்.தகுதியிருந்தும், முதல் தவணை முடிந்து, இரண்டாவது தவணை காலக்கெடு வந்த பின் பலர் முன்வருவதில்லை. எனவே வரும் வாரங்களில் தடுப்பூசி முகாம் எண்ணிக்கையை குறைப்பதுடன், தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டும் இடங்களில் மட்டுமே முகாம் நடத்த வேண்டியது அவசியம். இவ்வாறு  சுகாதாரத்துறையினர் கூறினர்.
Tags:    

Similar News