உள்ளூர் செய்திகள்
மக்கள் நீதி மய்யம்

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

Published On 2022-04-30 09:57 GMT   |   Update On 2022-04-30 09:57 GMT
“சனி, ஞாயிறன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்” என்ற அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டு, படிப்படியாக அதனை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களை நாடுகின்றனர்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலமுறை படையெடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. பன்னெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்சனையின் ஒருபகுதியைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதலளித்த முதல்வர் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும் இன்னும் பல அலுவலகங்களில் இதனை அமல்படுத்துவதும், ஞாயிறன்றும் அரசு அலுவலகங்களை இயங்கச் செய்வதுமே அனைத்து மக்களுக்கும் முழுப்பலன் கிடைப்பதை உறுதிசெய்யும். அதிகப்படியான மக்கள் அடிக்கடி வந்துசெல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். காவல்துறை, மருத்துவமனை, தீயணைப்புத்துறை, பேருந்து ஊழியர்கள் போன்ற துறையினர் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பணிபுரிந்துவருகின்றனர் என்பது இச்சமயத்தில் நினைவுகூரத்தக்கது.

பத்திரப்பதிவுத் துறையின் தற்போதைய அறிவிப்பில் சனிக்கிழமை பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் வேறொரு நாளில் விடுப்பு அளிக்கப்படவுள்ளது. இதேமுறையை மற்ற அரசு அலுவலகங்களும் பின்பற்றினால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பாரமில்லாமல் இதனைச் செயல்படுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்ற நிலையை உருவாக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டிய அவசியம் உருவாகலாம். இதுவும் ஒருவகையில் நல்லதுதான். குரூப்4 தேர்வின் 7300 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் சூழலில் “ஞாயிறும் பணி நாளே” என்ற நிலையானது கூடுதலாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்.

பொதுமக்கள், வேலை தேடும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பயன்தரும் “சனி, ஞாயிறன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்” என்ற அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டு, படிப்படியாக அதனை அமல்படுத்திடவும் மக்கள் நீதி மய்யம் கோருகிறது. “மக்களால், மக்களுக்காக, இயங்கும் மக்களுடைய அரசாங்கமே உண்மையான ஜனநாயகம்”. மக்களின் விடுமுறை நாளில் அரசாங்கம் இயங்கட்டும். நிர்வாக சீர்திருத்தத்தில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News