உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கூடுதல் செவிலியர்களை பணி நியமனம் செய்ய கோரிக்கை

Update: 2022-04-17 09:25 GMT
திருச்சி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி:

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வருகின்றன. கடந்த கொரோனா காலகட்டத்தின் போது தொடர்ந்து விடுமுறை கூட எடுக்காமல் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி புரிவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தாக்கம் முழுவதுமாக குறைந்துள்ளதால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் செவிலியர்கள் பற்றாக்குறை திருச்சி அரசு மருத்துவமனையில் அதிகரித்துள்ளது. இதனால் சரிவர நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. 138 செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பணி புரிகிறார்கள். மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் கூறுகையில், தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பணி செய்ய முடியாமல் இருக்கிறது. அதிகமான பணிச்சுமையும் இருந்து வருகிறது. கூடுதல் செவிலியர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் நியமிக்க வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா காலகட்டத்தில் தொடர் பணிகளில் ஈடுபட்டு விடுமுறை கூட எடுக்காமல் பாடுபட்டு வந்தவர்கள் செவிலியர்கள் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.

வெயில் காலமாக இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தற்போது அதிகமான நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்களை கவனித்துக்கொள்வது என்பது குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் செவிலியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

குறிப்பாக இரவு நேரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருப்பதால் நோயாளிகளுக்கு ஏற்படும் திடீர் சிக்கலை கவனிக்க முடியாமல் போகிறது. செவிலியர் ஒருவருக்கு 8 நோயாளிகளை கவனிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதனால் உணவு அருந்துவதற்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். விரைவில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை வைக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News