உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எக்ஸ்இ உருமாற்ற வைரசால் ஆபத்து வராது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

Published On 2022-04-14 12:32 GMT   |   Update On 2022-04-14 12:32 GMT
கொரோனாவில் இருந்து உருவானது ஒமைக்ரான் வைரஸ். இப்போது அதில் இருந்து பி.ஏ.1, பி.ஏ.2 என்ற இரண்டு வரை வைரஸ் உருவாகி அவை இரண்டும் கலந்து எக்ஸ் இ என்ற புதுவகை வைரசை உற்பத்தி செய்துள்ளது.
மீண்டும் கொரோனா...

இப்படி ஒரு வார்த்தை காதில் விழுந்தாலே அடிவயிற்றை கலக்கத்தான் செய்யும்.

பொதுவாக வைரஸ் என்பது உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து இருக்கும் அறிவியல் உண்மை.

அதன்படி புதிதாய் தோன்றிய கொரோனா வைரசும் உருமாற்றம் அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதன் பாதிப்புகள்தான் உலகையே நடுங்க வைத்துவிட்டது.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பாற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் கண்ணுக்கு தெரியாமலேயே அதன் பரவலும் உருமாற்றமும் நடந்து கொண்டே இருக்கிறது.

கொரோனாவில் இருந்து உருவானது ஒமைக்ரான் வைரஸ். இப்போது அதில் இருந்து பி.ஏ.1, பி.ஏ.2 என்ற இரண்டு வரை வைரஸ் உருவாகி அவை இரண்டும் கலந்து எக்ஸ் இ என்ற புதுவகை வைரசை உற்பத்தி செய்துள்ளது. இப்போது இந்த வைரஸ்தான் உலகை மிரட்டுகிறது.

புதுஉருவெடுத்துள்ள இந்த வைரஸ் 4-வது அலையாக வரலாம் என்றும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய அரசும் அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் தமிழகத்தில் பரவுவதற்கு சாத்தியம் உள்ளதா? தடுக்க முடியுமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதுபற்றிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து மீண்டு இருக்கிறோம். மீண்டும் அப்படி ஒரு நெருக்கடியை சந்திக்க கூடாது என்பதே எல்லோரது விருப்பமும்.

கொரோனா பரவிய ஆரம்ப கட்டத்தில் ஆல்பா, பீட்டா, காமா, கப்பா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகை உருமாற்றம் அடைந்தது. அதில் டெல்டா வகை வைரஸ்தான் கடுமையான பாதிப்பை கொடுத்தது. கடைசியாக ஒமைக்ரான் வந்தது.

ஏற்கனவே 7 வகையான உருமாறிய நிலையில் இப்போது ஒமைக்ரான் வைரசில் இருந்து பி.ஏ.-1, பி.ஏ.-2 என்ற மேலும் 2 வகை வைரஸ் உருவாகி இருக்கிறது.

இந்த வைரஸ் இங்கிலாந்தில்தான் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 627 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



பி.ஏ.-1, பி.ஏ.-2 ஆகிய இரண்டு வைரஸ்களும் ஒரே நபரின் உடலில் தொற்றினால், அவை இரண்டும் இணைந்து உருவாக்குவதுதான் இந்த ‘எக்ஸ்இ’ வகை வைரஸ்.

தற்போது எக்ஸ்இ தொற்றுக்கு ஆளானவர்களை பரிசோதித்தபோது பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.

ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் ஒமைக்ரானைவிட 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளது. நானும் லண்டனுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது புதிதாக பரவவில்லை என்றார்கள்.

அதே நேரம் அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்கு மேலாக பதிவாகி வருகிறது.

இந்தியாவில் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு எக்ஸ்இ வகை கொரோனா தொற்று இருந்திருக்கிறது. ஆனால் அதை உறுதிபடுத்தவில்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

இருப்பினும் மீண்டும் அப்படி ஒரு நெருக்கடியை சந்திக்க இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதால்தான் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனம், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். தமிழகத்தை பொறுத்தவரை 92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 77 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். முக்கியமாக 88 சதவீதம் பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. இது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கான்பூர் ஐ.ஐ.டி.யினர் நடத்திய ஆய்வில்தான் ஜூன் மாதம் 4-வது அலை வரலாம் என்று கூறப்பட்டது அதுவும் உறுதிப்படுத்த முடியாது.

4-வது அலை வருவதற்கான வாய்ப்பு இல்லை. அதே நேரம் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ கட்டமைப்புகள் காரணமாக வந்தாலும் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்று கருதுகிறேன்.

முதல் மற்றும் 2-வது அலையின்போது மருத்துவ கட்டமைப்புகள் குறைவு. அதன்பிறகு திறமையாக செயல்பட்டும், அலைகளில் கிடைத்த அனுபவத்தின் மூலமும் மருத்துவ கட்டமைப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் 3-வது அலையை எளிதாக கையாண்டோம்.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தொற்றும், இறப்பும் உச்சத்தில் இருந்தது. இப்போது தொற்று 50-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சாவு இல்லை.

மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.363 கோடியில் தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். 2099 நவீன படுக்கை வசதிகளும் தீவிர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டியதில்லை இன்னும் சில காலம். ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளை தாமாகவே கடைபிடிப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News