உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

சேலத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலைக்கு 135 சிறப்பு பஸ்கள்

Published On 2022-04-13 10:21 GMT   |   Update On 2022-04-13 10:21 GMT
சேலத்தில் இருந்து சென்னை, திருவண்ணாமலைக்கு 135 சிறப்பு பஸ்கள் இன்று மாலை முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் இன்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை முதல் 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதே போல சென்னையில் இருந்தும் சேலத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல நாளை மறுநாள் சித்ரா பவுர்ணமி வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சேலத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதிக்காக திருவண்ணாமலைக்கு நாளை ( 14-ந் தேதி) மாலை முதல் 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News