உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்- மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு

Published On 2022-04-08 06:20 GMT   |   Update On 2022-04-08 10:08 GMT
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
சென்னை:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது.

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

சாதி அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 31-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும், மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்புக்கு தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

அப்போது இந்த விவகாரம் பற்றி பேசுவதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினார்கள்.

அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடுத்து அனுப்பிய கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை கொடுத்தனர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் எழுதிய கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னிய மக்களின் சமூகநீதியை உறுதி செய்வதற்காக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத பணிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் துறைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் எனது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வழக்கில் கடந்த மார்ச் 31-ந்தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம். அது வன்னியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் புள்ளி விவரங்களுடன் நியாயப்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்கிஇருக்கிறது.

உச்சநீதிமன்றத்திடமிருந்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்றிருப்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இத்தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு சமூக நீதி வழங்கும் உரிமையும், அதிகாரமும் தமிழக அரசுக்கு வென்றெடுத்துத் தரப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு கிடைத்துள்ள வெற்றி என்பதில் ஐயமில்லை.

அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் கூறியவாறு, வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான புதிய சட்டத்தை இயற்றி செயல்படுத்துவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.

நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டை புதிய சட்டம் மூலம் மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி பாட்டாளி மக்களுக்கு உரிய சமூகநீதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதன் பிறகு அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சனிக்கிழமை பா.ம.க.வின் அவசர செயற்குழு கூடியது. அந்த கூட்டத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் ரத்து செய்தது குறித்து விவாதித்தோம்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, எனது தலைமையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன். டாக்டர் ராமதாஸ் கொடுத்து அனுப்பிய கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தையும் கொடுத்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. வன்னியர்களுக்கு விரைவில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சட்டசபையில் மீண்டும் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

சுப்ரீம் கோர்ட்டு தரப்பில் சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று எங்களுக்கு சாதக மாகத்தான் அந்த தீர்ப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தீர்ப்பில் கூறி உள்ளனர். எனவே இந்த சாதகமான அம்சங்கள் அனைத்தையும் முதல்-அமைச்சரிடம் எடுத்து சொன்னேன். இட ஒதுக்கீடு தொடர்பாக புள்ளி விவரங்களை கூடுதலாக சேகரித்து விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

அதற்கு முதல்-அமைச்சரும், சட்ட நிணர்களுடன் ஆலோசனை செய்து நல்ல சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறி உள்ளார். அரசு நினைத்தால் ஒரு வார காலத்திற்குள் கூடுதல் புள்ளி விவரங்களை சேகரிக்கலாம்.

கேள்வி:- இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை என்று நேற்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?

பதில்:-சுப்ரீம் கோர்ட்டில் நல்ல மூத்த வக்கீலை வைத்துதான் வாதாடி உள்ளனர். இந்த வி‌ஷயத்தை தமிழக அரசு நல்ல முறையில்தான் கையாண்டது. ஆரம்பத்தில் நாங்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று அ.தி.மு.க. அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அதன் பிறகு அதை உறுதி செய்து தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தை நல்ல முறையில் கையாண்டனர். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடாக கருத முடியாது.

இது சமூக நீதி பிரச்சினை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் ஒரே நிலையில் இருந்து இந்த இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.



Tags:    

Similar News