உள்ளூர் செய்திகள்
மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி

Published On 2022-03-03 10:43 GMT   |   Update On 2022-03-03 10:43 GMT
மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை


மதுரை கே.சாலைப்புதூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 54), விவசாயி. இவர் தனது மகனுக்கு அரசாங்க வேலை தேடிக்கொண்டு இருந்தார். 

அப்போது  மதுரை வடக்கு சித்திரை வீதியை சேர்ந்த ராஜமுத்து என்பவரின் பழக்கம் கிடைத்தது.அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரை எனக்கு தெரியும். எனவே நீங்கள் பணம் கொடுத்தால் சுலபமாக வேலை வாங்கிவிடலாம் என்று தெரிவித்து உள்ளார். 

இதனை நம்பிய தமிழரசன், சொத்துக்களை விற்று ரூ.33 லட்சத்தை ராஜமுத்துவிடம் கொடுத்துள்ளார்.அப்போது அவர்  ரூ.50 லட்சம் தேவை.   அரசு வேலை நியமன உத்தரவு கிடைத்ததும், மீதமுள்ள 17 லட்சம் ரூபாயை கொடுத்துவிட வேண்டும்  என்று கூறி உள்ளார். 

ஆனால் அதன் பிறகு ராஜமுத்துவை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் கூறியபடி  அரசு வேலை நியமன உத்தரவும் வரவில்லை.  இதனால விரக்தி அடைந்த  தமிழரசன் எனது மகனுக்கு அரசு வேலை வேண்டாம்.  

உங்களிடம் கொடுத்த ரூ.33 லட்சத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டார். ஆனால் ராஜமுத்து பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தமிழரசன்   பணத்தை உடனடியாக கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார்.

 அப்போது ராஜமுத்து பணத்தை தரமுடியாது என்று கூறியதோடு  கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் தமிழரசன் புகார் செய்தார். இதன் அடிப்படையில் மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ராஜமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News