உள்ளூர் செய்திகள்
வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம்

மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

Update: 2022-01-19 11:27 GMT
மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மதுரை


மதுரை புது மாகாளிப்பட்டி ரோடு துளசிராமன் முதல் தெருவை சேர்ந்தவர் சாந்தி(வயது 50). இவர் அதே பகுதியில் மிக்சர் கடையில் நின்றிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் சாந்தி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அழகர்கோவில் ரோடு மாத்தூரை சேர்ந்தவர் ஆசாத்(31). இவர் புதூர் மாரியம்மன் கோவில் குறுக்குத்தெருவில் நடந்து சென்றபோது அவரை வழிமறித்த கருப்பசாமிபாண்டி என்ற சூர்யா(24), லாரன்ஸ் (29), கார்த்திக்(24) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500யை பறித்துச்சென்றனர். 

இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குபதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் கோட்டூர் குருசாமி தெருவை சேர்ந்த சகுந்தலா (56) என்பவரிடம் 15 வயது சிறுவன் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினான். அண்ணாநகர் போலீசார் சிறுவனை பிடித்தனர். அவனிடம் இருந்து சகுந்தலாவின் செல்போனை பறிமுதல் செய்தனர். 

கோச்சடை அங்காள ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் விக்டர்கனி(62). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அங்கு புகுந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாநகரில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து இந்த கும்பல் நகை-பணத்தை பறித்துச்செல்கிறது. 

இது தொடர்பாக நகர போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இருப்பினும் வழிப்பறி கொள்ளையர்களின் சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News