உள்ளூர் செய்திகள்
ஏலகிரி மலையில் பொங்கல் விழா நடந்த காட்சி.

ஏலகிரி மலையில் பாரம்பரியம் மாறாத பொங்கல் விழா

Published On 2022-01-16 08:14 GMT   |   Update On 2022-01-16 08:14 GMT
ஏலகிரி மலையில் கிராம மக்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கல் வைத்து பாரம்பரியம் மாறாமல் கொண்டாடினர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலை ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற தமிழகத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. 

இங்குள்ள மலைவாழ்மக்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோவில் கட்டி அமாவாசை, பவுர்ணமி தினத்தன்று பூஜைகள் செய்து குடும்பத்தினருடன் வழிபட்டு வருகின்றனர். 

தமிழரின் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் முதல் விழாவான போகி அதற்கு முன் தினம் ஊர் மக்கள் சார்பில் ஒன்றுகூடி விழா நடத்துவது குறித்து பேசி கொடிமரம் ஏற்றி பின்னர் விழாவை சிறப்பாக கொண்டாடுவர். 

இதில் முதல் விழாவான போகியன்று அதிகாலையில் வீட்டு கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்து பொங்கல் வழிபடுவர். அதன் பிறகு மாலையில் அந்தந்த கிராம பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலின் முன்பு பொங்கல் வைத்து ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்து விருந்தினருக்கு உணவு அளிப்பர்.

 தை பொங்கலன்று இறந்தவர்களுக்கு வழிபடுவர். மாட்டுப் பொங்கலன்று அம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து ஆடு கோழி போன்றவற்றை பலியிட்டு விருந்து வைப்பார்கள். 

இதனையடுத்து மாலை கிராம மக்கள் ஒன்றுகூடி கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் குடும்பத்திற்கு ஒரு பொங்கல் வைத்து  மாடுகளை அலங்கரித்து அவற்றுக்கு  பூஜை செய்து பொங்கல் படைகளை கால்நடைகளுக்கு வழங்கி வழிபடுவர்.

 பின்னர் படைத்த பொங்கலை உறவினர்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் என அனைவருக்கும் உருண்டை பிடித்து வழங்குவர். 

அதன்பிறகு மலைவாழ் மக்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News