உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

விசைத்தறி சங்கங்கள் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு

Published On 2022-01-08 07:51 GMT   |   Update On 2022-01-08 07:51 GMT
அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் கூறியும் 7 ஆண்டாக கூலி உயர்வை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர்.
பல்லடம்:

விசைத்தறி சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அதன் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விசைத்தறி தொழில் அழிவுப்பாதைக்கு சென்று வருகிறது. அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் கூறியும் 7 ஆண்டாக கூலி உயர்வை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர்.

விசைத்தறி சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் விசைத்தறியாளர்கள் நடத்தும் இப்போராட்டத்தில் விவசாய சங்கம் முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்றும். 

ஏற்கனவே அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். நாளை முதல் விசைத்தறியாளர்கள் நடத்தும் போராட்டம் மட்டுமன்றி கூலி உயர்வு கிடைக்கும் வரை நடத்தப்படும் அனைத்து போராட்டங்களிலும் விவசாய சங்கம் பெரும் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தெக்கலூர் விதைத்தறி சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் பொன்னுசாமி தலைமையில் தெக்கலூரில் உள்ள மண்டபத்தில் நடந்தது. 

இச்சங்கத்தில் உறுப்பினர்களாக 15 கிராமங்களில் 617 விசைத்தறி குடோன்கள் உள்ளன. 10 ஆயிரத்து 262 விசைத்தறிகள் உள்ளன. கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிர்வாகிகள் பேசினர்.

பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னும் அரசு அறிவித்த 20 சதவீத கூலி உயர்வை அமல்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க முன்வராததை கண்டித்து நாளை முதல் கூட்டமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக்கிற்கு முழு ஆதரவு தருவது என முடிவெடுக்கப்பட்டது.

நூல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ளும் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறிகளுக்கு கூலி உயர்வு வழங்க தயக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.

சொந்தமாக ஜவுளி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களும் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தரவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News