உள்ளூர் செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார்.

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு பயன்படுத்தாதது வேதனை அளிக்கிறது- வானதி சீனிவாசன்

Published On 2022-01-03 06:31 GMT   |   Update On 2022-01-03 06:31 GMT
மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம்:

சிவகங்கையில் நடைபெறும் விடுதலை போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 12-ந்தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகிறார். அப்போது மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்தபோது, தி.மு.க.வினர் ‘கோபேக் மோடி’ என்று பதாகையை காட்டினர். இப்போது அப்படி காட்ட முடியாது.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக பிரதமர் மோடி வருகிறார். கடந்த முறை தமிழகத்தில் நடைபெற்ற ஆயுத தளவாட கண்காட்சியை திறந்து வைக்க வரும்போது ‘கோபேக் மோடி’ என்று தி.மு.க.வினர் சொன்னாலும்கூட, அந்த திட்டத்தின் மூலம் ரூ.2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.



பிரதமரை நீங்கள் திரும்பி போ என்று கூறினாலும் கூட அந்த திட்டத்தில் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. எனவே இவற்றை எல்லாம் தி.மு.க.வினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே ‘கோ பேக் மோடி’ என்று இப்போது சொல்ல மாட்டார்கள்.

மேலும் தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அறிவித்திருக்கிறது. மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தமிழகத்தில் சில திட்டங்கள் அமுல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கையில் ஒற்றை செங்கலை வைத்துக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் நடைபெறவில்லை என்று கூறினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே அந்த திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் தற்போது நிலை என்ன?. கட்டிடங்கள் கட்டி விட்டார்களா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News